Skip to main content
ஓம் நமசிவாய

ஓம் ஆத்மகுருவே சரணம்:

*தீட்சை* என்றால் என்ன ?

தீட்சை என்பது சிவாகமங்களில் கூறப்பட்ட சைவக்கிரியைகளில் ஒன்று.....சிவபெருமானைத் தியானித்து விதிப்படி வழிப்படுவதற்கு நமக்குத் தகுதியளிப்பது தீட்சை ஆகும்....சைவ சமயிகள் சமயப் பிரவேசம் செய்வதற்கான வழங்கப்பட்ட கிரியை இதுவாகும்

புராணங்களைப் படிப்பதற்கும்...மந்திரங்களை ஓதுவதற்கும்...ஞான சாஸ்திரங்களை கேட்பதறகும்.....படிப்பதற்கும்...பிரதிஷ்டை விவாகம் போன்ற நற் சமயக் கிரியைகளை செய்வதற்கும் தகுதியுடையவர்கள்   தீட்சை பெற்றவர்களே

`தீ’ என்றால் மலம்.
`ஷை’ என்றால் ஒழித்தல்.

மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.

மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை,
தந்திரக்கலை,
உபதேசக்கலை ஆகிய
மூன்று படிநிலைகள் உள்ளன.

மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை,
கிரியை,
யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.

நான்கு எழுத்து,
ஐந்து எழுத்து,
ஆறு எழுத்து,
எட்டு எழுத்து உள்ளிட்ட
பல மந்திரங்களை  உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும்.
இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.

முத்திரைகளையும்,
யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள்  தந்திரக்கலை ஆகும்.
இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.

இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான,
ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும்.

இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள்.
இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு  உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.

தீட்சைகள் ஆறு வகைப்படும்.  அவையாவன :


*பரிச தீட்சை,   
நயன தீட்சை,   
பாவனா தீட்சை,   
வாக்கு தீட்சை,   
யோக தீட்சை,
நூல் தீட்சை*

1.....பரிச தீட்சை

 ஒரு பறவை முட்டையிட்டு,
அதன் மேல் உட்கார்ந்து,
அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும்.

ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்–
புருவ மத்தியிலும்,
தலை உச்சியிலும் –
நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.

2...நயன தீட்சை

 ஒரு மீன் முட்டையிட்டு
அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து,
மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை.

ஞானகுரு தமது திருக்கண்ணால்
சீடரின் கண்களைப் பார்த்து
புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை,
அகத்தில் பார்க்க அருளுவதே
நயன தீட்சையாகும்.

3...பாவானா தீட்சை

 ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு,
பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது
பாவனா தீட்சை ஆகும்.

ஞானகுரு தன்னைப் போன்றே
தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு,
உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள்
வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம்
ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.

4...யோக தீட்சை

ஞானகுரு தன் அருளால்
அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும்.

தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து
12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து,
சும்மா இருப்பதுவே வகார திருநிலை.

 இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.

5....வாக்கு தீட்சை

 ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும்,
தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும்,
இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி,

அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து,
ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.

6....நூல் தீட்சை

சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும்,
அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும்,
அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு
வழிகாட்டும் நூலாக அருள்வது
நூல் தீட்சையாகும்.

உண்மையில்,
யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல.

 எண்ணமற்று, சகஜத்திலேயே,
மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே
வாசி யோகம் என்பதைப் புரிந்துகொள்க.

எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து,
அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும்,
உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று,
மாசற்று தன்னை உணர்ந்து,

தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.

ஓம்  நமச்சிவாய........திருச்சிற்றம்பலம்


Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.