Skip to main content
#தெய்வம்_தேடிவந்து_அருளும்!

#திருமூலர்_மந்திர_ரகசியம்;

செல்வம், தெளிந்த அறிவு, பெருமை, மிகவும் உயர்ந்த நிலை - இவற்றை விரும்பாதவர் யார்? இவற்றை அடையும்  வழி என்ன? திருமூலர் சொல்கிறார்.

பிரான் அருள் உண்டு எனில் உண்டு
நற்செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு
நல்ஞானம்
பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே
 (திருமந்திரம் - 1645)

கருத்து : சிவபெருமான் அருள் இருந்தால், அனைத்து விதமான செல்வங்களும் உண்டாகும். சிவபெருமான் அருள்  இருந்தால், அறிவு நலம் அடையலாம். சிவபெருமான் அருள் பெறுதற்கரிய பெருமைகளை அருளும், சிவபெருமான்  அருள் இருந்தால் தெய்வ நிலையையும் அடையலாம். வரிவரியாக மட்டுமல்ல, வார்த்தை வார்த்தையாக அனுபவித்து  உணர வேண்டிய பாடல் இது.

பிரான் அருள் - என நான்கு வாக்கியங்களிலும் சொன்ன திருமூலர் முதல் இரண்டு வரிகளில் ‘நல்’ என்ற  சொல்லையும், பின் இரண்டு வரிகளில் ‘பெரும்’ என்ற சொல்லையும் இருமுறைகள் பிரயோகித்து  உள்ளார்.குருவருளும், திருவருளும் துணை கொண்டு இயன்றவரை அனுபவிக்கலாம் வாருங்கள்!பிரான் என்ற  சொல்லுக்குப் ‘பிரியாதவன்’ என்பது பொருள். அதை உணர்வதே ‘நற்செல்வம்’.நீருக்குள் மின்சாரம் இருந்தாலும்,  நீருக்கு அது தெரியாது. கல்லுக்குள் கனல் (தீ) இருந்தாலும் கல்லுக்கு அது தெரியாது. பாலுக்குள் நெய் இருப்பது,  பாலுக்குத் ெதரியாது. அவற்றையெல்லாம் உணர்ந்து, செயல்பட்டு வெளிக் கொணர்கிறோம் அல்லவா?அதுபோல, ஜோதிமயமான இறைவன், நம் உள்ளத்தில் மறைந்து இருக்கிறார். அவரை உணர்ந்து செயல்பட்டால், அவர்  தாமே முன்வந்து நிற்பார் எனத் திருநாவுக்கரசர் விவரிக்கிறார்.

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல
மறைய நின்றுளன்மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே
(திருநாவுக்கரசர்)

இவ்வாறு பாடிய திருநாவுக்கரசர் பெற்றது ‘நற்செல்வம்’. திருமூலர் சொன்ன நற்செல்வம் இதுவே. ராவணன்,  மகிஷாசுரன், பண்டாசுரன் என அவர்கள் எல்லாம் பெற்றது வெறும் செல்வம் மட்டுமே, நற்செல்வம் அல்ல.  செல்வத்திற்கும் நற்செல்வத்திற்கும் என்ன வித்தியாசம்? நாம் பெற்றதை வைத்து நாம் மட்டும் வாழ்ந்தால் அது  செல்வம். நாம் பெற்றதை வைத்துப் பலர் வாழ்ந்தால், அது நற்செல்வம்.ராவணன் முதலான அசுரர்கள் யாவரும்,  கடுந்தவம் செய்து, செல்வத்தைத் தரிசித்து, அதன் மூலம் பெற்ற வரங்களை வைத்து, அடுத்தவரை அடக்கி அழித்து  தாங்கள் வாழ்ந்தார்கள்.

திருமூலர், திருநாவுக்கரசர் முதலானவர்களோ தவம் செய்து தெய்வத்தைத் தரிசித்து, அதன் மூலம் தாங்கள்  பெற்றவற்றை வைத்து மற்றவர்களை வாழ வைத்தார்கள். இவர்கள் பெற்றது ‘நற்செல்வம்’ இவர்களுக்கு மட்டும்  ‘நற்செல்வம்’ எப்படிக் கிடைத்தது. அடுத்த வரியில் விவரிக்கிறார் திருமூலர். அங்கும் ‘நல்’ எனும் சொல்லை முன்  வைத்து ‘நல் ஞானம்’ எனத் தெளிவுபடுத்துகிறார்.ஞானம் என்ற சொல், பொதுவாக அறிவைக் குறிக்கும். தனக்கும்  கேடு செய்து கொண்டு, அடுத்தவர்க்கும் கேடு விளைவிக்கும் ஞானத்தை (அறிவை) பெற்றவர் பலர்.
தனக்கும் நன்மை செய்து கொண்டு, மற்றவர்க்கும் நன்மை செய்கின்றவரே ‘நல்ஞானம்’ பெற்றவர். இவ்வாறு  இருந்தால் அவர்களைத்தேடி நிலையான பேரும் புகழும் தாமே வரும்.

திருவள்ளுவரும் திருமூலரும் என்ன, புத்தகமா போட்டார்கள்? அவர்கள் பெற்ற நல்ஞானம் இன்று வரை, எத்தனை  பேருக்கு வழிகாட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறது! அளவிட முடியுமா என்ன?பேரும் புகழும் விரும்பாத அவர்கள்  பெற்ற நல்ஞானம், இன்று வரை அவர்களுக்குப் பேரையும் புகழையும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றதே!  இவ்வாறான தகவலை மூன்றாவது வரியில் சொன்ன திருமூலர், அவர்கள் பெற்ற நிலையை அடுத்த வரியில் சொல்லிப்  பாடலை நிறைவு செய்கிறார்.தெய்வ அருள் பெற்றவர்கள், தெய்வ நிலையையே அடைவார்கள் என்கிறார்.உண்மைதானே! சிவன் கோயில்கள் பலவற்றிலும், திருநாவுக்கரசர் இருக்கிறார். தெய்வத்திற்கு நடப்பதைப் போலவே, திருநாவுக்கரசருக்கும் அபிஷேக அலங்கார - வழிபாடுகள் நடக்கின்றனவே! திருவள்ளுவருக்கோ, சென்னை மயிலையில்  திருக்கோயிலே உள்ளது; வழிபாடுகளும் விமரிசையாக நடக்கின்றன.

ஆகவே, உயர் நிலை அடைய வேண்டுமானால், பேரும் புகழும் பெற வேண்டுமானால், நல்ஞானமும், நற்செல்வமும்  பெற வேண்டுமானால், இறை அருள் வேண்டும். அதைப்பெற முயல வேண்டும் என்பதே, இப்பாடலின் மூலம்  அனுபவசாலியான திருமூலர் நடத்தும் பாடம்.அடுத்த பாடலில் தெரிந்ததையும் முரண்பாட்டையும் வைத்துப் பாடுகிறார் திருமூலர். எதை வைத்து எதைப் பெறலாம் என்பது நன்றாகவே தெரியும். அதே சமயம் முரண்பாடாக பேசினால் கூட,  மனம் என்பது பெரும்பாலும் பாழுங்கிணற்றைப் போலத்தானே இருக்கிறது.

இது போல, தெரிந்ததை வைத்து, முரண்பாட்டையும் வைத்துப் பாடல் பாடி, தகவல்களை அளிக்கிறார் திருமூலர்.

கதிர் கொண்ட காந்தம் கனலின்
வடிவாம்
மதி கொண்ட காந்தம் மணி நீர் வடிவாம்
சதி கொண்ட சாக்கி--- எரியின் வடி
வாம்
எரி கொண்ட ஈசன் எழிலி வடிவர்மே
(திருமந்திரம் - 1653)

கருத்து: சூரிய காந்தக்கல் சூரிய வெப்பம் பட்டவுடன், நெருப்பைப் போல் வெப்பத்தை வெளிப்படுத்தும். சந்திர காந்தக்  கல் சந்திர ஒளி பட்டவுடன், முத்துப் போல நீர்த்துளிகளை வெளிப்படுத்தும். சிக்கி முக்கிக் கற்களோ, ஒன்றோடு ஒன்று  மோதினால், தீப்பொறிகளை வெளிப்படுத்தும். ஆனால். தீப்பிழம்பு போல ஒளி வீசும் திருமேனி கொண்ட ஈசனோ, மழை  பொழியும் மேகம் போலத் தண்ணொளி வீசும் தயாபரன் ஆவார்.வழக்கப்படி தான். அபூர்வமான பாடல் இது. மூன்று  கற்களைச் சொல்லி, நான்காவது அடியில் சிவபெருமானைச் சொல்லி இணைத்திருக்கும் அழகுப் பாடல் இது.முதலில் சொல்லப்பட்ட சூரிய காந்தக்கல் அனைவருக்குமே தெரிந்ததுதான். பரவிக் கிடக்கும் சூரியக் கதிர்கள், சூரிய  காந்தக்கல்லின் மூலம் ஒருமுகப்படுத்தப்பட்டு வெளிப்படும்போது, தீப்போல் வெப்பத்தை வெளிப்படுத்தும்.

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட சந்திர காந்தக்கல் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது. ஒரு சிலர்  மட்டுமே அறிந்திருக்கலாம். சூரபத்மன் - ராவணன் ஆகியோரின் அரண்மனையில் சந்திரகாந்தக் கல்லினால்  அமைக்கப்பட்ட அறைகள் இருந்ததாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.சூரிய காந்தக்கல் எப்படி, சூரியக் கதிர்களை  ஒருமுகப்படுத்தி வெளியேற்றி, அதிகப்படியான வெப்பத்தை வெளிப்படுத்துகிறதோ அது போல; சந்திர காந்தக்கல்,  குளிர்ச்சி மிகுந்த சந்திரனின் ஒளிக்கற்றைகளை வாங்கி ஒருமுகப்படுத்தி, குளிர்ச்சியை அழுத்தமாக வெளியிடும்; அவை  நீர்த்துளிகளாக உருவாகும். அந்நீர்த்துளிகள் ஆற்றல் மிக்கவை.

இவ்வாறு இரண்டு கற்களைச் சொன்ன திருமூலர் மூன்றாவது அடியில் மூன்றாவதாக ஒரு கல்லைச் சொல்கிறார். அது,  ‘சிக்கி முக்கிக் கல். இரு சிக்கி முக்கிக் கற்களை, ஒன்றோடு ஒன்று உரசினால் தீப்பொறிகள் வெளிப்படும்.இந்த மூன்றுமே பெயருக்கும், வடிவத்திற்கும் ஏற்ப  ஒரே செயலைத்தான் செய்கின்றன.ஆனால் சிவபெருமானின்  தோற்றமோ, ஞான நூல்கள் சொன்னபடி ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி’, ‘ஒளி வளர் விளக்கே’ -  என்றெல்லாம், ஜோதி வடிவாக - தீ வடிவாக இருக்கின்றது. அப்படியென்றால் தீ வடிவமான அவரிடம் இருந்து வெப்பம்  தானே வெளிப்பட வேண்டும்! இல்லையே, கருணையல்லவா வெளிப்படுகின்றது!

அந்தக் கருணையின் வெளிப்பாட்டைச் சொன்ன திருமூலர், ‘எழிலி’ என்ற ஓர் அற்புதமான தமிழ்ச் சொல்லை  அமைத்தார் பாருங்கள்! அழகு! அழகு!எழிலி என்ற சொல்லுக்குக் குளிர் மழை பொழியும் கார்மேகம் என்பது பொருள்.உப்புக்கடலில் இருந்து உப்பை நீக்கி நன்னீரை மட்டும் உறிஞ்சி, அதை உலகெங்கும் எந்த விதமான பாகுபாடும் இன்றிப்  பொழிகிறது - கார்மேகம். பல இடங்களிலும் சுற்றி மழை பொழிகிறது - கார் மேகம் அது போலத்தான் இறைவனும்!  நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி, நல்லவைகளை மட்டுமே ஏற்கிறார். அவரவர் இருக்கும் இடம் நாடி, அருள் மழை  பொழிகிறார்.பாடலை மறுபடியும் ஒரு முறை, வரிசைப்படுத்தி பார்க்கலாம் வாருங்கள்!சூரியன் - சந்திரன் என  வெவ்வேறாகச் சொன்னாலும் சூரியனிடம் இருந்து தான் பெற்ற ஆற்றலையே, சந்திரன் இரவில் குளுமையாக வெளிப்படுத்துகிறது.

இரண்டின் தன்மையும் வேறுவேறாக இருந்தாலும், அவற்றின் விளைவுகளைக் கொண்டு, நாம் நலம் பெறுகிறோம்.  அடுத்ததாகச் சொல்லப்பட்ட சிக்கி முக்கிக் கற்களோ, ஒரே தன்மையை கொண்டது. அவற்றின் விளைவுகள் மூலமும்  நாம் நலம் பெறுகிறோம்.அதுபோல, இறைவன் மூலம் அவர் கருணையை பெற முயல வேண்டும் என  அறிவுறுத்துகிறார் திருமூலர். அடுத்த பாடலில் புண்ணியப் பொருளாய் இருப்பவர் இறைவன் எனத் தொடங்கி, தெய்வம்  தேடிவந்து அருளும் என்பதை விவரிக்கிறார்.

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே
(திருமந்திரம்)

புண்ணியப் பொருளாக இருப்பவர் எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அனைத்திற்கும் தந்தை ஆனவர்; எந்தவிதமான  அமங்கலங்களும் நெருங்க முடியாத மங்கல வடிவினர், அப்படிப்பட்ட அந்த இறைவனின் திருவடிகள் என்னிடம்  நெருங்கி வந்தன. நல்லறிவு விளக்காக என்னுள் திகழ்ந்து, வழிகாட்டி அருளியது எனக்கு. சாதாரண மனிதர்கள்  மண்ணில் சிறந்தவர்களாக ஆவதும், விண்ணில் சிறக்கும் தேவர்கள் ஆவதும் இறைவனின் அருளைப் பெற்ற போதே,  அடையும் பேறுகளாகும்.இறைவன், தன்னைத் தேடி வந்து அருள்புரிந்ததைத் திருமூலர் சொல்லும் இப்பாடல், ஆழ்ந்த  கருத்து உடையது.திருமூலரைத் தேடி வந்து அருள் புரிந்தாராம் இறைவன். இதைச் சொல்லும் பாடல் ‘புண்ணியன்’  எனத் தொடங்குகிறது

பாருங்கள்!ஆழம் காண வேண்டிய சொல் இது. நம் தெய்வங்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு வாகனத்தை அமைத்து  வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஏன்? அந்த வாகனங்கள் இல்லாவிட்டால், தெய்வங்களால் வர முடியாதா? முடியும்!பிறகு, தெய்வங்களுக்கு வாகனங்கள் ஏன்? நாம் செய்த புண்ணியங்கள் வாகனமாக இருந்து  தெய்வத்தைச் சுமந்து வந்து அருள் பொழியச் செய்கிறது.இந்தத்தகவலை சித்த புருஷர்களில் ஒருவரான சிவ வாக்கியர் கூறுகிறார்.

ஆடி நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடி விட்ட குதிரை போல் தாமே வந்து நிற்குமே

- என்பது சிவ வாக்கியம்.

அரச பதவி, அதற்கு உண்டான படைகள், பிராணாயாம வித்தை முதலானவை எல்லாம், இறையருளை தராது. செய்யக்கூடிய நற்செயல்களும், தர்மங்களும் வாகனமாக இருந்து, இறைவனை அழைத்து வந்து அருள்மழை பொழியச் செய்யும்  - என்பதே அந்த சிவ வாக்கியத்தின் கருத்து. அப்படிப்பட்ட ‘‘அந்த இறைவனின் இரு திருவடிகளும் என்னை நெருங்கி  வந்து, நல்லறிவு விளக்காக திகழ நல்வழி காட்டி அருளியது’’ என்கிறார் திருமூலர். மனிதர்களும், தேவர்களும்  இறையருள் பெற்ற அப்போதே மேன்மை அடைவார்கள் - எனப் பாடலை நிறைவு செய்யும் திருமூலர், ‘நல்லதைச்  செய்! தெய்வம் உன்னைத் தேடி வரும்; அருள் புரியும்; மேன்மை அடையலாம்’ என அறிவுறுத்துகிறார்.

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.